நண்பனின் மகளுடன் உல்லாசம்.! மூன்று கொலை.! அண்ணன் தம்பிக்கு ஆயுள்.!!(முழு விபரம்)

16 July 2020, 6:27 pm
Villupuram Judgement -Updatenews360
Quick Share

விழுப்புரம் : 3 பேரை கொன்று பாழடைந்த கிணற்றில் புதைத்த வழக்கில் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனையும், அவரது சகோதரருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் பரபரப்பான தீர்ப்பு அளித்தது.

விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 36). இவர் ஷோபா, மெத்தை தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மகள் பார்கவி (17). இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் முருகனுக்கு தெரியவரவே அவர், இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பார்கவி, கடந்த 28.5.2012 அன்று சென்னைக்கு சென்று அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னையும், தனது காதலன் சதீசையும் சேர்த்து வைக்கக்கோரி முறையிட்டார்.

மேலும் எங்களின் காதலுக்கு என்னுடைய தந்தை முருகன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், எங்கள் காதலை அவர் கட்டாயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் மீறி காதலித்தால் என்னை அவர் கொலை செய்து விடுவதாகவும் கூறிய பார்கவி, ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த காதலர்களை என்னுடைய தந்தை முருகன் கொலை செய்துவிட்டு அவர்களது உடல்களை வீட்டின் பின்புறமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் புதைத்து விட்டதாகவும், இந்த விஷயம் எனது தாய் ராஜேஸ்வரி மூலமாக தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.

பார்கவி, இவ்வாறு தனியார் தொலைக்காட்சியில் தோன்றி தனது தந்தையின் கொடூர செயலை பற்றி பரபரப்பான தகவலை கூறிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியை பார்த்த செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் சேகரின் மனைவி ஜீவா (வயது 40) என்பவர் கடந்த 1.6.2012 அன்று விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தனது மகள் லாவண்யாவை (16) தேடி எம்.குச்சிப்பாளையத்தில் உள்ள உறவினர் முருகன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறிச்சென்ற தனது கணவர் சேகர் மீண்டும் வீடு திரும்பவில்லை, அவரை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை. எனவே முருகன் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்தி எனது கணவரை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகனின் மகள் பார்கவி, தனியார் தொலைக்காட்சியில் கூறியது போன்று லாவண்யாவையும், அவரது காதலனான நல்லாண்பிள்ளைபெற்றால் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனையும் (வயது 20) மற்றும் ஜீவா கொடுத்த புகாரின்பேரில் லாவண்யாவை தேடிச்சென்ற அவரது தந்தை சேகரையும் முருகன் கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதற்காக முருகனின் வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு அவர் இல்லை, போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த அவர் தலைமறைவானார். அவரது மனைவி ராஜேஸ்வரியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் சிலம்பரசன், லாவண்யா, சேகர் ஆகிய 3 பேரையும் முருகன் கொலை செய்து பிணத்தை வீட்டின் பின்புறமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் புதைத்து விட்டதையும், இதற்கு முருகனின் தம்பி மதியரசன், நண்பர் மூர்த்தி ஆகியோர் உடந்தையாக செயல்பட்டதாகவும் போலீசாரிடம் கூறினார்.

உடல்கள் தோண்டி எடுப்பு

இதையடுத்து முருகன் வீட்டின் பின்புறமுள்ள பாழடைந்த கிணற்றை தோண்டி அங்கு புதைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் உடல்களையும் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 5.6.2012 அன்று பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அந்த பாழடைந்த கிணற்றை போலீசார் தோண்டினர். 3 பேரையும் கொலை செய்து பிணத்தை கிணற்றுக்குள் புதைத்து 3 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் அங்கு பள்ளம் தோண்ட, தோண்ட எலும்புக்கூடுகளாகவும், மண்டை ஓடுகளாகவும் கிடைத்தது. அதன் பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளை கைப்பற்றி சோதனை செய்து ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே தலைமறைவாக இருந்த முருகன், அவரது தம்பி மதியரசன், நண்பர் மூர்த்தி ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் சிலம்பரசன், லாவண்யா, சேகர் ஆகிய 3 பேரையும் முருகன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக மதியரசன், மூர்த்தி ஆகியோரும் இருந்துள்ளனர். மேலும் முருகன், தனது மனைவி ராஜேஸ்வரியிடம் இந்த கொலையை பற்றி வெளியில் யாரிடமும் சொன்னால் உனக்கும் இதே நிலைமைதான் என்று அடித்து உதைத்து மிரட்டியதோடு ராஜேஸ்வரிக்கு மொட்டை அடித்துள்ளார். கணவருக்கு பயந்து ராஜேஸ்வரியும் இந்த சம்பவத்தை பற்றி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

தீவிர விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக முருகன், மதியரசன், மூர்த்தி, ராஜேஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:

முருகன் தனது தொழில் சம்பந்தமாக அடிக்கடி நல்லாண்பிள்ளைபெற்றால் கிராமத்தில் உள்ள உறவினர் சேகர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். முருகனின் தொழிலுக்கு சேகர் பண உதவியும் செய்துள்ளார். இவ்வாறு அடிக்கடி சேகர் வீட்டிற்கு வந்து சென்ற சமயத்தில் முருகனுக்கும், சேகரின் மகள் லாவண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

இதற்கிடையில் லாவண்யாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு லாவண்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2008ம் ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு எம்.குச்சிப்பாளையத்தில் உள்ள முருகன் வீட்டிற்கு சென்று நிலைமையை எடுத்துக் கூறியுள்ளனர். உடனே முருகன், அவர்கள் இருவருக்கும் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளார்.

இதையறிந்த சேகர், எம்.குச்சிப்பாளையத்திற்கு சென்று மகள் லாவண்யா, சிலம்பரசன், முருகன் ஆகியோருடன் தங்கியுள்ளார். பின்னர் சேகருக்கு தெரியாமல் சிலம்பரசன், லாவண்யா ஆகியோரை கணக்கன்குப்பம் மலையில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அழைத்துச்சென்று முருகன் திருமணம் செய்து வைத்துள்ளார். இதை கேள்விப்பட்டதும் முருகனிடம் சேகர் தகராறு செய்துள்ளார். மேலும் தான் கொடுத்த பணத்தை கேட்டு முருகனிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இதனால் சேகரை கொலை செய்ய முருகன் திட்டம் போட்டுள்ளார். அதன்படி ஊருக்கு தெற்கே உள்ள சுடுகாட்டிற்கு சேகரை அழைத்துச்சென்று அவருக்கு மது வாங்கி கொடுத்தனர். பின்னர் போதையில் இருந்த அவரை முருகன், கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். பின்னர் சேகரின் உடலை, முருகன் வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் குழிதோண்டி புதைத்தனர். இந்த கொலைக்கு மூர்த்தி, சிலம்பரசன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

பின்னர் முருகன், சிலம்பரசன் ஆகியோரிடம் லாவண்யா தனது தந்தை சேகரை பற்றி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். ஓரிரு நாளில் மீண்டும் வருவார் என்று கூறி லாவண்யாவை சமாளித்து வந்தனர். ஆனால் முருகன், சிலம்பரசன் ஆகியோரின் மீது சந்தேகப்பட்டு லாவண்யா அடிக்கடி சேகரை பற்றி விசாரித்து வந்ததால் லாவண்யா உயிரோடு இருந்தால் தங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதி அவரையும் கொலை செய்ய முடிவு செய்தனர். சேகர் இறந்து 2 நாட்கள் கழித்து லாவண்யாவை அருகில் உள்ள சுடுகாட்டிற்கு முருகன், சிலம்பரசன், மூர்த்தி ஆகியோர் அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு வைத்து லாவண்யாவை 3 பேரும் சேர்ந்து கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு சேகரை புதைத்த அதே இடத்திலேயே லாவண்யாவையும் புதைத்தனர்.
இந்த சம்பவங்களுக்கு பிறகு சிலம்பரசன் அடிக்கடி மது குடித்துவிட்டு முருகனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதோடு தனக்கு பணம் தரவில்லையெனில் நடந்த கொலைகளை பற்றி வெளியில் சொல்லிவிடுவேன் என்று முருகனை மிரட்டி வந்துள்ளார். இதனால் சிலம்பரசன் உயிரோடு இருந்தால் நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்று கருதிய முருகன், சிலம்பரசனையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்கு தனது தம்பி மதியரசனின் உதவியையும் முருகன் நாடியுள்ளார்.

அதன்படி சில நாட்கள் கழித்து முருகன், மதியரசன், மூர்த்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து சிலம்பரசனுக்கு மது வாங்கி கொடுத்து அவரையும் கழுத்தை இறுக்கி கொலை செய்து ஏற்கனவே 2 பேரை புதைத்த அதே இடத்திலேயே சிலம்பரசனையும் புதைத்துள்ளனர்.

4 பேர் கைது

இந்த தகவல்களை முருகன் கூறிய வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர். தொடர்ந்து, முருகன், மதியரசன், மூர்த்தி, ராஜேஸ்வரி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பிறகு இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூர்த்தி இறந்து விட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று பரபரப்பான தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட முருகன், மதியரசன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறி அவர்களுக்கு தண்டனை விதித்தும், முருகனின் மனைவி ராஜேஸ்வரியை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

3 ஆயுள் தண்டனை

தொடர்ந்து, முதல் குற்றவாளியான முருகன் செய்த கொடூர கொலை சம்பவத்திற்காக ஒவ்வொரு கொலைக்கும் ஒரு ஆயுள் தண்டனை வீதம் 3 ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு கொலைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதமும், கொலையை மறைத்த குற்றத்திற்காக ஒவ்வொரு கொலைக்கும் தலா 2 ஆண்டு வீதம் 6 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும், மதியரசன் செய்த கொலை குற்றத்திற்காக அவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனை காலங்களை இருவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் முருகன் 42 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், மதியரசன் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். தொடர்ந்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.