தாறுமாறாக ஓடிய கார்.. கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேர் பரிதாப பலி : அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2021, 6:38 pm
Accident 3 Dead - Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : சீர்காழி அருகே கார் மோதியதில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 36). இவர் கர்ப்பிணியான தனது மனைவி தமிழ்வாணியை வயது 30) பரிசோதனைக்காக வைதீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது கற்கோயில் உடையாம்பாளையம் என்ற இடத்தில் எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் கர்ப்பிணியான தமிழ் வாணியும் அவரது கணவர் புருஷோத்தமனும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து வேகமாக சென்ற கார் 100 நாள் வேலை முடித்துவிட்டு சாலையோரம் நடந்து சென்ற உடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் மனைவி தையல்நாயகி (வயது 52), சந்திரகாசு மனைவி ராணி (வயது 60) ஆகியோர் மீது மோதியது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த தையல் நாயகி, ராணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே தையல்நாயகி பரிதாபமாக உயிரிழந்தார். ராணி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். டிரைவரின் அஜாக்கிரதையால் தறிகெட்டு ஓடி வந்த கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் அவரது கணவர் மற்றும் மூதாட்டி உள்ளிட்ட நான்கு உயிர்கள் பறிபோன சம்பவம் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கி குளத்திற்குள் தள்ளிவிட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இவ்விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளதுடன் தப்பி ஓடிய கார் டிரைவரையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி பதிவு வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
….

Views: - 372

0

0