மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு : கல்லூரி பேராசிரியர் சிறையில் அடைப்பு

7 July 2021, 10:57 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன், ‘தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முதுகலைப்பட்ட மாணவிகள் 5 பேர் கல்லுாரி முதல்வரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர். ‘அவருக்கு, உதவி பேராசிரியர் நளினி என்பவர் உறுதுணையாக இருப்பதாகவும், இதன் காரணமாக கல்லுாரிக்கு வருவதற்கு அச்சமாக இருக்கிறது’ எனவும் குறிப்பிட்டிருந்தனர். அதையடுத்து, மூத்த பெண் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தலைமையிலான உள்விசாரணைக்குழு விரிவான விசாரணை நடத்தி, ‘மாணவிகளின் புகார் உண்மை’ என்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதையடுத்து, பேராசிரியர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி ஆகியோரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதற்கிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவின் உத்தரவின்பேரில், சமூக நல அலுவலர் தமீமுன் நிஷா, கல்லூரி மாணவிகளிடம் தனி விசாரணை மேற்கொண்டார். நடந்த சம்பவம் உண்மை என தெரிய வர, சமூக நல அலுவலர் தமிமூன் நிஷா, பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதனடிப்படையில், பால் சந்திரமோகன் மீது,5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து பால் சந்திரமோகனை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதையடுத்து கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். பால் சந்திரமோகனை கருர் கிளை சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் கிளைச் சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Views: - 209

0

0