கனமழையால் அமராவதி அணை நிரம்பியது : நள்ளிரவு முதல் உபரி நீர் வெளியேற்றம்!!

5 September 2020, 12:51 pm
Amaravathy Dam - Updatenews360
Quick Share

திருப்பூர் : அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி இரு ஆண்டுகளுக்கு பின் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த மாதம் கேரள மாநிலம் மூணாறு மற்றும் மறையூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பெய்த கனமழை காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து வரத்தொடங்கி 87 அடியை எட்டியது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 4500 கன அடி தண்ணீர் வர தொடங்கியது.

இதனால் நேற்று இரவு 10 மணி அளவில் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியது.இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அமராவதி ஆற்றில் 9 மதகுகள் வழியாக நள்ளிரவில் திறந்து விடப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்றும் ஒன்பது மதகுகளும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 1380 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில்,அணையின் நீர் மட்டம் 88.49 அடியாக உள்ளது.இன்று அதிகாலை முதல் உபரி நீரானது அமராவதி கால்வாய் மற்றும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது

Views: - 6

0

0