முன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர் : முதல் ஆளாக கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு!!

19 January 2021, 10:59 am
tirupur Collector - Updatenews360
Quick Share

திருப்பூர் : கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் , அரசின் விதிமுறைகளை பின்பற்றி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருவதாக தமிழகத்தில் முதல் ஆட்சியராக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 16ஆம் தேதி முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்திற்கென 13,500 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் நாளொன்றுக்கு 400 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்த திட்டமிட்டதில் கடந்த இரண்டு நாட்களாக 285 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் .

இந்நிலையில் திருப்பூர் அவினாசி சாலை உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் இன்று தமிழகத்தில் முதல் மாவட்ட ஆட்சியராக தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூர் மாவட்டத்திற்கு 13500 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்காக நான்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி குறித்த வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் எனவும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் இதுவரை ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

எந்த வித அச்ச உணர்வும் இல்லாமல் முன் களப்பணியாளர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் வகையில் தானே முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சில நிமிடங்கள் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்பு அனுப்பப்பட்டார்.

Views: - 8

0

0