அறுவை சிகிச்சை இல்லாமல் கட்டியை அகற்றி சாதனை : திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்!!
5 February 2021, 11:26 amதிருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இன்றி தொழிலாளிக்கு கல்லீரலில் இருந்த கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக திருப்பூர் இருப்பதால், நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது திருப்பூர் அரசு மருத்துமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றும் பணியும் நடந்து வருகிறது. இதற்கிடையே திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கருவியியல் துறையை சேர்ந்த டாக்டர் பிரவீன்குமார் குழுவினர், திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகம்மது ரபீக் (வயது 44) என்ற தொழிலாளிக்கு கல்லீரலில் இருந்த சீல் கட்டியை அறுவை சிகிச்சை இன்றி அகற்றி சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால் முதல் முறையாக அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை இன்றி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கட்டியை அகற்றியுள்ளோம். அதாவது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமாக கட்டியின் தன்மை குறித்து முதலில் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து நுண் துளையிட்டு பிக்டைல் கத்திட்டர் (நவீன தொழில்நுட்பம்) மூலமாக அந்த கட்டியை அகற்றினோம். தற்போது அவர் நலமாக இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்தால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு நடமாட முடியாது. ஆனால் இந்த சிகிச்சையின் மூலம் எந்த வித தழும்பும் ஏற்படுவதில்லை. நடமாடவும் முடியும் என்றார். இவர்களை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் சக டாக்டர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
0
0