திருப்பூர் மக்களை திணறடித்த சிறுத்தை சிக்கியது : மயக்க ஊசி செலுத்தி சாமர்த்தியமாக பிடித்த வனத்துறை அதிகாரிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan27 January 2022, 3:04 pm
திருப்பூர் : அவிநாசி அருகே மக்களை அச்சுறுத்தி வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா பாப்பாங்குளம் எனும் பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியளவில் சோளக்காட்டிற்குள் மாறன் மற்றும் வரதராஜன் ஆகிய இருவரை பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது.
தகவலறிந்து சோளக்காட்டில் ஒன்றுகூடிய பொதுமக்களில் மேலும் இரு நபர்களை சிறுத்தை தாக்கியது. நான்கு நபர்களை சிறுத்தை தாக்கிய நிலையில் உடனடியாக வனத்துறையினர் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் பாப்பாங்குளத்திற்கு வந்தனர்.
சிறுத்தை பதுங்கியிருக்கும் சோலைப்பட்டி சுற்றி 12 வனவிலங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சோளத்தட்டை சுற்றி மூன்று தூண்கள் அமைத்து மாமிசங்கள் உள்ளே வைத்து சிறுத்தை வருகிறதா என கண்காணித்து வந்தனர்.
திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த வன ஊழியர் வீரமணி கண்டனை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சோள காட்டில் இருந்து சிறுத்தை வெளியேறாத வண்ணம் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் சோள காட்டில் இருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி துவங்கப்பட்டது. க்ரேன் கொண்டு வரப்பட்டு தேடும் பணி துவங்கியது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டு , சைரன் ஒலிக்கப்பட்டும் எந்தவிதமான அறிகுறியும் தென்படாததால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் நேரடியாக சோளக்காட்டிற்குள் இறங்கி தேடினர்.
அப்பொழுது தான் சிறுத்தை வெளியேறியது தெரிய வந்தது. உடனடியாக அருகாமையில் இருக்கும் கிராம மக்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதுடன் சிறுத்தையை தேடும் பணி ஆரம்பம் ஆனது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெருமாநல்லூர் பகுதியில் சிறுத்தை தென்படுவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க முடியும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை காலை பெருமாநல்லூர் பொங்குபாளையம் எனும் இடத்தில் துரை என்பவருக்கு சொந்தமான காட்டில் சிறுத்தையின் எச்சங்களும் , கால் தடமும் கண்டறியப்பட்டது. உடனடியாக பொங்குபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மேலும் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் தெரிகிறதா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அம்மாபாளையம் எனும் இடத்தில் பேஸ்ட் குடோனில் வேலை பார்த்த ராஜேந்திரன் என்பவரையும், பிரேம் என்ற வேட்டைதடுப்பு காவலரையும் சிறுத்தை தாக்கியது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் நான்காவது நாளாக இன்றும் ஈடுபட்டனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பு பணிகளில் மீறி குடோனில் இருந்து வெளியேறியது.
அருகாமையில் இருக்கும் முட்புதரில் தான் சிறுத்தை பதுங்கியிருக்கிறது என உறுதி செய்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் நிற்பதற்கு அருகாமையில் சென்று மருத்துவர்களால் மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
மயக்க ஊசி செலுத்தியதுடன் முட்புதரில் இருந்து வெளியில் வந்த சிறுத்தை அருகாமையில் இருந்த சந்துக்குள் அரை மயக்கத்துடன் சென்றது. மயக்கம் அடையும் வரை காத்திருந்த வனத்துறையினர், மயக்கம் அடைந்த சிறுத்தையை கூண்டு வைக்கப்பட்ட வண்டியில் ஏற்றி உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திய மருத்துவர் விஜயராகவன் செய்தியாளர்களிடம் பேசிய போது , பிடிபட்டது ஆண் புலி என்றும் அதனுடைய வயது எத்தனை என்பதை இனிமேல் தான் கண்டறிய வேண்டும் என்றும் , தோராயமாக 3 முதல் 4 வயது இருக்கும் என்றும் , உரிய மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு எந்த வனப்பகுதியில் விடுவது என முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
0
0