ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறும் கொரோனா..! 76 சிஆர்பிஎப் வீரர்களும் குணம்
6 August 2020, 1:12 pmசென்னை: ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 76 சிஆர்பிஎப் வீரர்கள் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுவிட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காவல்துறை உட்பட சிஆர்பிஎப் வீரர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அது தவிர ஆளுநர் மாளிகை பாதுகாப்பு பணிக்கு என்று பிரத்யேக ஐபிஎஸ் அதிகாரியும் இருக்கிறார்.
ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் பட்சத்தில் அவர்கள் தங்குவது ஆளுநர் மாளிகையில் தான். இந்நிலையில், சிஆர்பிஎப் முகாம் அலுவலகத்தில் வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட மற்ற வீரர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
முடிவில் 76 வீரர்களுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, கொரோனா பாதித்த 76 வீரர்களும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் 76 வீரர்களும் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகை பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.