அரியர்ஸ் தேர்வு விவகாரம் : மாணவர்கள் நலன் கருதியே நடவடிக்கை! அமைச்சர் விளக்கம்!!

9 September 2020, 6:51 pm
Kadamboor Raju - updatenews360
Quick Share

தூத்துக்குடி : கொரோனா காலத்தில் மாணவர்கள் நலன் காக்க எடுத்த முடிவு என்று அரியர்ஸ் தேர்வு குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் நடுவிற்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார்.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 40லட்ச ரூபாய் கடனுதவி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளை சார்பில் 19 பயனாளிகளுக்கு 18லட்சத்து 62 ஆயிர ரூபாய் கறவை மாடுகள் வாங்குவதற்கான நிதியுதவியை வழங்கினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜி.எஸ்.டி.வரி நமது கட்டுப்பாட்டில் இல்லை, இது மத்தியரசு விதிக்கும் வரி, ஏற்கனவே திரைத்துறையினருக்கு ஜி.எஸ்.டிவரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த போது, தமிழக அரசு முயற்சி எடுத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வரி குறைப்பு செய்ய கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் தான் தமிழகத்தில் மட்டும் திரைப்பட திரையரங்கு டிக்கெட்களுக்கு 100 ரூபாய் வரை 18சதவீதமும், 100 ரூபாய்க்கு மேல் 28சதவீதம் என இரு முறையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தினை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டிவரி விதிப்பினை குறைக்க முடிவு செய்தால் தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தும் என்றார்.

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றும் ஏற்படுமா என்று கேள்வி கேட்டதற்கு அதிமுகவில் எந்த மாற்றத்தையும் யாராலும் (சசிகலா) ஏற்படுத்த முடியாது,முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழிகாட்டுதலுடன் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதிமுகவில் மாற்றத்தை எந்த சக்தியாலும்(சசிகலா) ஏற்படுத்த முடியாது என்றார்.

மேலும் அரியர்ஸ் வைத்தள்ளவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை மக்களும் மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் மாணவர்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்றுதான் கூறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஐ.சி.டி.சி விதிமுறைகளின்படி அரியர்ஸ் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, கொரோனா காலத்தில் மாணவர்கள் நலன் காக்க எடுத்த முடிவு அனைவரும் வரவேற்கின்றனர் என்றார்

Views: - 0

0

0