நாளை மறுநாள் தொடங்குகிறது யானைகளின் “GET TOGETHER“ : 48 நாட்களும் இனி குஷிதான்!!
6 February 2021, 5:25 pmகோவை : மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறும் இடத்தினை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 2012 ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பாவனி ஆற்றுப்படுகையில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற இருந்த யானைகள் முகாம் கொரோனா தொற்று காரணமாக முகாம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வருகிற 8ஆம் தேதி தொடங்கி 48 நாட்கள் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த 26 யானைகள் பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. முகாம் நடைபெறும் இடத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, யானைகள் தங்கும் இடம், யானை பாகன்கள் தங்கும் இடம், உணவுக்கூடம் போன்றவை அமைப்பதற்கான பணிகள் துவங்கி நடைப்பெற்று வருகிறது.
காலை முதல் இப்பணிகள் துவங்கிய நிலையில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் கட்டி வைக்கப்படும் இடத்தில் உள்ள முட் புதர்களை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தப்பட்டு வருவதுடன் யானைகள் பவானி ஆற்றில் குளிப்பதற்கு “சவர் பாத்“ அமைக்கும் பணியும் நடைப்பெற்று வருகிறது
மேலும் முகாம் நடைபெறும் இடம் வனப்பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டுயானைகள் நுழைவதை தடுக்க முகாமை சுற்றி சோலார் மின்வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நாளைக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது
0
0