அன்று அப்படி…இன்று இப்படி: இருளர் இன மக்களுக்கு பாலாபிஷேகம் செய்த ஓட்டுநர்…கமெண்ட்டுகளை குவிக்கும் நெட்டிசன்கள்..!!

Author: Aarthi Sivakumar
11 December 2021, 3:30 pm
Quick Share

பெரம்பூர்: பேருந்தில் பயணம் செய்ய வந்த இருளர் இன பயணிகளுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இணைந்து பாலில் பாதபூஜை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வரும் செல்வம் என்ற பெண் அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பம் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உறுதி செய்யவேண்டும் என பலர் ஆதரவுக்குரல் எழுப்பினர்.

இதற்கிடையே குமரியில் பேருந்திலிருந்து குறவர் சமூக குடும்பம் இறக்கிவிடப்பட்ட சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்பட்டது. அந்த குடும்பத்தினர், பேருந்தினுள் தொந்தரவு செய்யும் வகையில் சண்டையிட்டதால் தான் இறக்கிவிடப்பட்டது உறுதியானது.

இந்நிலையில், தற்போது மற்றொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோ பெரம்பூர் பணிமனையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பேருந்தில் பயணம் செய்ய வந்த குறவர் இனத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு பேருந்தின் ஓட்டுனர் அப்துல்மன்னா, நடத்துனர் பூமணி உள்பட மற்றொருவரும் பாலில் பாதபூஜை செய்து, மஞ்சள், குங்குமம் இடுகின்றனர்.

மேலும், இருவருக்கும் மாலை அணிவித்து, கற்பூர ஆரத்தி காட்டி பணிவுடன் பேருந்தினுள் ஏற சொல்கின்றனர். பின்னர், இருவருக்கும் டிக்கெட் கொடுக்கும் வரை அந்த வீடியோ பதிவு உள்ளது. சமீபத்தில் நாகர்கோவிலில் பேருந்து ஊழியர்கள் குறவர் மக்களை இறக்கிவிட்ட சம்பவம் வைரலானது. இதனையடுத்து, இந்த வீடியோ கேளி செய்யும் வகையில் உள்ளதாகவும், அவர்களுக்கு சமூக நீதி தான் தேவையே தவிர, பால்அபிசேகம் என்பது டூமச் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 211

0

0