மாயாற்றில் வெள்ளப்பெருக்கு.! பவானிசாகர் – தெங்குமரஹாடா இடையே போக்குவரத்து துண்டிப்பு.!!
4 August 2020, 4:34 pmஈரோடு : நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பவானிசாகர்- தெங்குமரஹாடா கிராமத்துக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சிற்றாறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீரும் நீலகிரி வனப் பகுதியில் பெய்த மழை வெள்ளமும், தெங்குமரஹாடா மாயாற்றில் கலந்ததால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தெங்குமரஹாடா கிராமத்துக்கும், பவானிசாகருக்கும் இடையே மாயாறு ஓடுவதால் ஆற்றை தாண்டித்தான் கிராமத்துக்குச் செல்ல இயலும். தற்போது ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் விவசாயப் பொருள்களைக் கொண்டு செல்லமுடியாமல் லாரிகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இரு கிராமங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பவானிசாகர், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து தெங்குமரஹாடா கிராமத்திற்கு செல்ல படகு மூலம் ஆற்றைக் கடக்க முடியாமல் பொதுமக்கள் கரையிலேயே காத்திருக்கின்றனர். இதுபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆற்றை கடக்க முடியாத சூழல் உள்ளதால் மாயா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0