நிச்சயம் செய்யப்பட்டது திருமணம் மட்டுமல்ல மரணமும் கூட : மெட்டி எடுக்க சென்ற திருமண ஜோடி விபத்தில் பலியான சோகம்!!

Author: Udayachandran
4 August 2021, 11:36 am
Bike Accident - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்தானதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெரியபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜித் (வயது 23). தாளத்துறை பகுதியைச்சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர்களுக்கு திருமண நிச்சியிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆடிப்பெருக்கு தினமான நேற்று மேட்டுப்பாளையத்தில் திருமணத்திற்காக மெட்டி எடுக்க தனது அக்கா செவ்வந்தி (வயது 23) உடன் அஜீத்தின் இருசக்கர வாகனத்தில் வந்து விட்டு அன்னூர் சாலை வழியாக சென்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது,புதிய காய்கறி மொத்த மைதானம் அருகே அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியைச்சேர்ந்த அப்துல் ஹமீது மகன் ஷேக் அலாவுதீன் (வயது 23),சாதிக்(வயது 18) ஆகியோரின் இருசக்கர வாகனமும்,அஜீத்தின் இருசக்கர வாகனமும் நேருக்கு மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை காவல் துறையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த அஜீத், பிரியங்கா இருவர் மற்றும் லேசான காயமடைந்த செவ்வந்தி உள்ளிட்ட மூவர் என 5 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த அஜீத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரியங்காவிற்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், காயமடைந்த மூவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சிறுமுகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து உறவினர் கவிதா கூறுகையில் இறந்த பிரியங்காவுடன் பிறந்தவர்கள் 3 பெண்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.பிரியங்காவின் அப்பா கருப்பசாமி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நலமடைந்துள்ளார்.அவருக்கு பிரியங்கா இறந்த விஷயமே தெரியாது என வேதனையுடன் தெரிவித்தார்.

கடைசியாக பிரியங்காவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் நேற்று கால் மெட்டி எடுக்க மேட்டுப்பாளையம் வந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சாலை விபத்தில் ஜோடிகள் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளது.

Views: - 432

1

1