ஆற்றில் மீன் பிடிக்க சென்ற போது சோகம்! நீரில் மூழ்கி தாத்தா பேரன் பலி :

16 April 2021, 11:27 am
River 2 Dead -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாற்று பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த தாத்தா பேரன் எதிர்பாரமால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அச்சங்குளம் கிராமத்தினை சேர்ந்த சைவைத்துறை (வயது 65) என்பவர் விவசாய பணிகள் செய்து வந்தார். இவருடைய மகள் சுப்பலெட்சுமி, இவருக்கு திருமணமாகி அதே கிராமத்தில் அவரது கணவர் ராஜேந்திரன், ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார்.

சுப்புலெட்சுமி மகன் மதன், 8 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், தற்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் தனது தாத்தா சைவைத்துறையுடன் வைப்பாற்றில் மீன் பிடிக்க செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

நேற்றும் வழக்கம் போல தாத்தா, பேரன் இருவரும் மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆனால் நேற்று இரவு வரை வீடு திரும்பவில்லை என்றதும், சைவைத்துறை மற்றும் மதனை தேடி உறவினர்கள் ஆற்று பகுதிக்கு சென்ற போது இருவரும் சென்ற இருசக்கர வாகனம், மீன் பிடிக்க பயன்படும் தூண்டில், துணி ஆகியவை மட்டும் கிடந்துள்ளது.

ஒருவேளை நீரில் மூழ்கி இருக்கலாம் என்று கருதிய அவர்களது உறவினர்கள் மாசார்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்;. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட தேடுலுக்கு பின்னர் இன்று அதிகாலை இருவரின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த இருவருக்கும் நீச்சல் தெரியாது, துணியை வைத்து மீன் பிடிக்க முயன்ற போது ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீன்பிடிக்க சென்று தாத்தா, பேரன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 20

1

0