இரண்டு தண்டவாளங்களிலும் ஒரே நேரத்தில் வந்த ரயில்கள்: பணியில் இருந்த மேலாளர் பரிதாப பலி..!!

Author: Aarthi Sivakumar
18 September 2021, 2:00 pm
Quick Share

கோவை: மதுக்கரை அருகே ரயில் தண்டவாள பராமரிப்பு பணியின் போது ஒரே நேரத்தில் இரண்டு தண்டவளத்திலும் ரயில் வந்ததால் பணியில் இருந்த தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் மணிக்குட்டன். 50 வயதான இவர் போத்தனூர் – பாலக்காடு ரயில்வே தண்டவாளம் மற்றும் அருகே உள்ள பணிகளை மேற்கொள்ளும் கேரளா நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது,கோவை – பாலக்காடு ரயில் பாதை அருகே சுத்தம் செய்து கான்கிரிட் தடுப்பு மற்றும் தண்டவாள பராமரித்து மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சுமார் 50 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல பணிக்கு வந்த மணிக்குட்டன் ரயில்வே தண்டவளத்தில் மேற்கொண்டு வரும் பணி குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஊழியர்களுக்கு சொல்லிக்கொண்டிருத்த போது திடீரென ஒரு தண்டவளத்தில் ரயில் வந்ததாக தெரிகிறது.

இதனால் அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்திற்று சென்ற போது பாலக்காடு நோக்கிச் சென்ற சபரி விரைவு ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீஸார் மணிகுட்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

உயிரிழந்த மணிகுட்டனுக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சம்பவம் தொடர்பாக கேரளாவில் உள்ள உறவினர்களுக்கு போலீஸார் தகவல் அனுப்பி உள்ளனர். பணியாளர்கள் கண் முன்னே மேலாளர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 267

0

0