கோவை ஊர்க்காவல் படையில் முதன்முறையாக திருநங்கைகள் : சாதிக்க துடித்தவர்களுக்கு வாய்ப்பளித்த காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2022, 8:11 pm
Transgender in Police - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் முதன்முறையாக 3 திருநங்கையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில், மாவட்ட ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட ஊர்க்காவல் படையில் 380-க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த திருநங்கைகளான சிறுமுகையைச் சேர்ந்த வருணாஸ்ரீ (வயது 21), தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த மஞ்சு (வயது 29), போத்தனூரைச் சேர்ந்த சுசித்ரா பன்னீர்செல்வம் (வயது 27) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவர்கள் மூவரும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முறை, பாதுகாப்புப பணியில் ஈடுபடும் முறை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதில் வருணாஸ்ரீ பிளஸ் 2 முடித்துள்ளார். கட்டிடத் தொழிலுக்கு சென்று வருகிறார். இவர், சிறுமுகையில் பெற்றோருடன் வசித்து வருகிறார். மஞ்சு, பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் குடும்பத்தை பிரிந்து ஆதரவற்று இருந்த போது, டெய்லரிங் தொழில் கற்று தையல் தொழில் செய்து வந்தார். மேலும், அரசு உதவியுடன் ஆட்டோ வாங்கி, ஆட்டோவும் ஓட்டி வருகிறார். தந்தை மறைவுக்கு பிறகு, அவரது தாய்இவரை ஏற்றுக் கொண்டதால், அவருடன் தற்போது வசித்து வருகிறார்.

சுசித்ரா பன்னீர்செல்வம் பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். ஆன்லைன் ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றிக் கொண்டு, வாடகைக் காரும் ஓட்டி வருகிறார். இவர்களுக்கு இரண்டு வார பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Views: - 415

0

0