பள்ளி மாணவி கடத்தல்.! 4 பிள்ளைகளுக்கு தந்தையானவருடன் கட்டாய திருமணம் செய்ய முயற்சி.!!
8 August 2020, 6:23 pmதிருச்சி : பள்ளி மாணவியை கடத்தி ஏற்கனவே திருமணமானவருடன் திருமணம் செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த முத்தமடைப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியினரின் 15 வயது மகள் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அருகில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வரும் சிறுமி, கொரோனா பொது முடக்கத்தால் தாயின் உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், தொப்பாநாயக்கன்பட்டியை சேர்ந்த சகோதரர்கள் ரங்கசாமி, ரங்கநாதன் ஆகியோர் அங்குச் சென்று, மாணவியின் தாய் அழைப்பதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட தூரம் அழைத்துச் சென்று, பின்னர் காரில் மாணவியைக் கடத்திக் கொண்டு சீல் நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜமீன்(எ)பழனிச்சாமி என்பவரின் வீட்டில் இறக்கி விட்டுள்ளனர்.
அங்கு பழனிச்சாமியை திருமணம் செய்துகொள்ள மாணவியை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளாராம். இதனிடையே மகளை காணாத தாய் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தாவிடம் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையில் சிறுமி குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தெரிந்த பழனிச்சாமியைச் சேர்ந்த நபர்கள் மாணவியை காரில் அழைத்துச் சென்று வையம்பட்டி காவல் நிலையம் அருகே இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி காவல்துறையினர் குழந்தை கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகியுள்ள பழனிச்சாமி, ரங்கநாதன், ரங்கசாமி, கோபால் ஆகிய நால்வரை தேடி வருகின்றனர். பழனிச்சாமிக்கு ஏற்கனவே திருமணமாகி 4 பெண் குழந்தை உள்ளது, மேலும் ஆண் குழந்தைக்காகப் பள்ளி மாணவியைத் திருமணம் செய்யக் கடத்தியதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.