என் தம்பி எங்கே…? திருச்சி விஜய் மன்ற ராஜாவின் மனைவி போலீஸ் மீது குற்றச்சாட்டு

12 November 2020, 11:02 pm
Quick Share

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியினை நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கடந்த 5ம் தேதி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். அந்த கட்சியின் தலைவராக திருச்சியை சேர்ந்த பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா அறிவிக்கப்பட்டார். ஆனால் நடிகர் விஜய் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தார்.

இந்தநிலையில் திருச்சி மாவட்டம் எதுமலை பகுதியில் ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக ஆர்.கே.ராஜா மோசடியில் ஈடுபட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் புகார் ஒன்றினை திருச்சி மாநகர குற்றப்பிரிவில் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஆர்.கே.ராஜாவை கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

போலீசார் தன் மீது பொய்வழக்கு போட முயற்சிப்பதாக ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ராஜாவின் மனைவி சுஜாதாவை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்.. எனது தம்பியை காஜபேட்டை மெயின்ரோட்டில் இருந்து, போலீசார் அடித்து இழுத்து சென்றுள்ளனர். இது குறித்து பாலக்கரையில் புகார் அளித்ததை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை.

இரவு முழுவதும் எனது வீட்டில் உட்கார்ந்திருந்த போலீசார் காலையில் என்னையும், எனது தந்தையையும் அழைத்து சென்றனர். எனது கணவர் மீது உள்ள புகாருக்கு எனது தம்பியையும், தந்தையையும், என்னையும் போலீசார் இது போல நடத்தி உள்ளனர். எனது தம்பி என்ன ஆனார் என்பது தொியவில்லை. எனவே நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Views: - 19

0

0