பாலத்தில் இருந்து தலைக்குப்புற கவிழ்ந்த லாரி : உராய்வு காரணமாக தீ பிடித்ததால் பரபரப்பு.. நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்…!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 5:15 pm
Lorry Fire Accident - Updatenews360
Quick Share

பாலத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பிடித்த பெயிண்ட் லாரி உயிர் தப்பிய ஓட்டுநர் – சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயிண்ட் தீயில் எரிந்து நாசம்

கோவை சூலூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்த தீப்பிடித்த பெயிண்ட் லாரி அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் கிளீனர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பேருந்து பணிமனை அருகே ஐதராபாத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பெயிண்ட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்து விபத்துக்குள்ளானது‌.

இதில் லாரியில் உராய்வு ஏற்பட்டு திடீரென லாரி முழுவதும் தீ பற்றிக்கொண்டது. லாரியை ஓட்டி வந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் உதவியாளர் ஜெகன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதனை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயில் எரிந்து உருகி சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெயிண்ட் நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி ஒன்று தலைகுப்புறக் கீழே விழுந்து தீப்பிடித்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 752

0

0