காவலர் தாக்கியதால் உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குக : டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
23 June 2021, 3:49 pm
TTV dinakaran 01 updatenews360
Quick Share

சென்னை : சேலம் மாவட்டத்தில் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் தாக்கியதில், குடிபோதையில் இருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், விவசாயியை தாக்கி கொலை செய்த போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கும் வரை முருகேசனின் சடலத்தை வாங்கப்போவதில்லை என உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போலீசாரால் தாக்கப்பட்டு விவசாயி முருகேசன் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், “சேலத்தில் காவல்துறையினர் தாக்கியதால் முருகேசன் என்கிற வியாபாரி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களிடம் காவல்துறையினர் இத்தகைய வன்முறைப் போக்கைக் கடைப்பிடிப்பதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சாத்தான்குளத்தில் தந்தை – மகன் இருவரும் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததன் முதலாமாண்டு நினைவு நாளில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், மக்களிடம் வன்முறையைக் கையாளாமல் நடந்து கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளும், காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஆலோசனைகளும் காவல்துறையினருக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்தார்.

Views: - 247

0

0