ரூ.6 லட்சம் மதிப்பில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கல்.! 2 பேர் கைது.!!

9 August 2020, 7:02 pm
Kovilpatti Kanja Arrest - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டியை காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் இலுப்பையூரணி பகுதியில் உள்ள கிட்டங்கியில் சோதனையிட்டனர்.

இதில் அந்த கிட்டங்கியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூடை மூடைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதன் மதிப்பு ரூ.6லட்சம் ஆகும். விசாரணையில், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ஒக்கடுராம் மகன் ராகேஷ் (வயது 30), கோபால் செட்டி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (வயது 22) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், ஒவ்வொரு மாதமும் கர்நாடகா மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூடைகளாக கொண்டு வரப்படுவது தெரியவந்தது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றபோது இலுப்பையூரணி மயான பகுதியில் நின்ற இளைஞரை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கோவில்பட்டி மறவர் காலனியை சேர்ந்த சுடலைமுத்து மகன் குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Views: - 32

0

0