விரைவில் திமுக பெரிய பிளவை சந்திக்க உள்ளது : அமைச்சர் கடம்பூர் ராஜு சூசகம்.!!

14 August 2020, 11:39 am
Minister Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விரைவில் திமுக பெரிய பிளவை சந்திக்க உள்ளது என்றும், கொரோனா நோய் தாக்கத்தின் குறைவினை பொறுத்து திரையரங்கு திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துரை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரில் ஆதிபாரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடி மாத கஞ்சி கலய விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு கஞ்சி கலயம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுகவில் பிரிவுகள் எதுவும் இல்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என்றும், 2முறை சின்னம் முடக்கப்பட்டு, மீண்டும் சின்னத்தை பெற்று ஆட்சியை பிடித்த வரலாறு அதிமுகவிற்கு தான் உண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலிலதா மறைவுக்கு பின் பிரிந்தோம், சேர்ந்தோம் ஆட்சியை பிடித்துள்ளோம்.

கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு.க.ஸ்டாலினால் குடும்பத்தினை கூட கட்டுப்படுத்த முடியவில்லை, மு.க. அழகிரி தனித்து உள்ளார், மு.க.ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் பனிப்போர் நடைபெற்று கொண்டு இருக்கிறது. கனிமொழிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் முன்னிலைப்படுத்துகிறார்.மு.க.ஸ்டாலினால் குடும்பத்தினை கூட ஒற்றுமைப்படுத்த முடியவில்லை என்றும், வி.பிதுரைச்சாமி, கு.க.செல்வம் வெளியேறிவிட்டனர்.

துரைமுருகன் அமைதியாக இருக்கிறார்.நாடாளுமன்ற தேர்தலில் சறுக்கலை சந்தித்தாலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக பெரிய பிளவை சந்திக்கவுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இன்றைக்கு இருக்கும் கட்டுக்கோப்பான திமுக இருக்க போவதில்லை என்றும், திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகள் அவர்களுடன் இருக்க போவதில்லை, அங்கு இருக்கும் பெரும்பாலான கட்சிகள் எங்களுடன் வரப்போகிறது.

இதையெல்லாம் தெரிந்து தான் அதிமுகவில் ஒற்றுமை இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.இந்திய அளவில் திரையரங்கு திறப்பது பற்றி ஒரு முடிவு எட்டப்படவில்லை.கொரோனா நோய் தாக்கத்தினை குறைவினை பொறுத்து திரையரங்கு திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் என்றார்.