3 தலைமுறையை கண்ட ஆலமரம் வேரோடு சாய்ந்தது : அஞ்சலி செலுத்திய மக்கள்!!
1 September 2020, 5:22 pmதூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் வீசி பலத்த காற்றுக்கு சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சரிந்து விழுந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது லிங்கம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் நேற்று மாலையில் வீசிய பலத்த காற்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் மர கிளைகள் முறிந்து விழுந்து சில வீடுகள் சேதமும் அடைந்தன.
அதிலும் அக்கிராமத்தின் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே இருந்த சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த பள்ளி சத்துணக்கூடத்தின் மேலே சரிந்து விழுந்தது. சுமார் 300 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு நிழல் தந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
3 தலைமுறைகளுக்கு மேலாக தங்களுடன் பயணித்து வந்த மரம் வேரோடு சரிந்து போனதை தாங்கி கொள்ள முடியாத முதியவர்கள் சிலர் மரத்தினை பாகங்களை தொட்டு பார்த்து தங்கள் உணர்வுகளை கண்ணீர் துளிகளாக வெளிப்படுத்தினர். மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மரத்திற்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
இளைப்பறுவதற்கு நிழல், தூய்மையான காற்று தந்து, தங்களின் வாழ்வியுலுடன் இணைந்து இருந்த மரம் சரிந்து விழுந்தது தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது என்றும், எங்களுடன் பயணித்த ஆலமரத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளதாக அப்பகுதியை சேர்;நத பாலமுருகன் தெரிவித்தார்.
0
0