தேர்தல் முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே மோதல் : இளம்பெண் தீக்குளிக்க முயற்சி.!!
15 August 2020, 8:06 pmதூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் ஒரு பிரிவினர் நடத்திய போராட்டத்தின் போது இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் காவல் நிலையத்திற்குட்டபட்ட புளியங்குளம் கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே கடந்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து முன்பகை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடிரென இருபிரிவினருக்கிடையே நடந்த மோதலையடுத்து, குளத்தூர் போலீசார் இருபிரிவினரை சேர்ந்த 13பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரச்சினைக்கு காரணமாக உள்ள ஊராட்சி மன்றத்தலைவருடைய கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மேலும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும் என வலியுறுத்தி ஒருபிரிவை சேர்தவர்கள் திடீரென விளாத்திகுளம் – குளத்தூர் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோபி, விளாத்திகுளம் டிஎஸ்பி(பொறுப்பு) பெலிக்ஸ்சுரேஷ்பீட்டர், மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபபிள்ளை, முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசார் தரப்பில் இரு பிரிவினர் மீதும் வழக்குபதிந்து உரிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தெருவீதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் ஏதேனும் சம்பந்தப்பட்ட குற்ற நிகழ்ச்சிகள் பதிவு ஆகியிருந்தால் அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணயை தனது உடலில் உற்றி தீக்குளிக்க முயன்றதால் போது போலீசார் அவரை தடுத்து கையிலிருந்த மண்ணெண்ணெய் பாட்டில்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.