ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..!

19 August 2020, 1:21 pm
Quick Share

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு, 13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி “தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்” என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா குழுமம். 1992-ஆம் ஆண்டு முதன் முதலாக மகாராஷ்டிராவின் ரத்னகிரியில்தான் தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் ஆலையை அமைத்தது. ஆனால், நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபடுவதாக கூறி அங்கு மக்கள் போராட்டம் வெடித்ததால் ஆலை முற்றிலுமாக மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 1994-ஆம் ஆண்டு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கினார்.

ஆனால் தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு இருந்து வந்த சூழலில், கடந்த 2013-ஆம் ஆண்டு அந்த ஆலையில் இருந்து விஷவாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் மூச்சு திணரல் போன்ற உடல் ஊபாதைகளுக்கு ஆளாகினர். மட்டும் இன்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கவும் செய்தார்.

இதனை தொடர்ந்து அங்கு மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஏராளமான பொதுநல வழக்குகள் குவிந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2013-ல் பிறப்பித்த உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான ஸ்டெர்லைட்டின் அப்பீல் மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி கொடுத்தது. தேசிய தீர்ப்பாயத்தின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்தாலும் அது தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டது.

2018-ல் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் பகுதியில் மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் 100-வது நாளில் 2018 மே 22-ந் தேதியன்று மாவட்ட ஆட்சியரகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்றனர்.

அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

இது மட்டும் இன்றி தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதி கூறினர். இந்த சூழலில், ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய மூகாந்திரம் இருப்பதால், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 19

0

0