மக்காசோளம் ஏற்றி வந்த லாரியில் போதை வாசனை : ரூ.50 லட்சம் மதிப்புள்ள குட்காவுடன் இருவர் கைது!!
22 January 2021, 1:39 pmஈரோடு : சத்தியமங்கலம் அருகே லாரியில் கடத்தி வந்த சுமார் 50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் ஹனூர் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதை வழியாக திருப்பூர் மாவட்டம் பல்லடதிற்கு பல லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கோவை திட்டமிட்ட நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் பண்ணாரி சோதனை சாவடியில் அதிகாலை மூன்றரை மணிக்கு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் மக்காச்சோளம் மூட்டைகளுக்கு நடுவே சுமார் 50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக லாரியை ஓட்டி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காந்தராஜ் மற்றும் நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே கர்நாடகாவில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக தமிழகத்திற்கு குட்கா பொருட்கள் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0
0