100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்..! சென்னையில் பதுங்கியிருந்த இலங்கை கொள்ளையர்கள் கைது..!
22 January 2021, 9:33 pmபோதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) இலங்கை நாட்டைச் சேர்ந்த இரண்டு முக்கிய கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது. கோல்டன் கிரசெண்டில் இருந்து மாலத்தீவு மற்றும் இலங்கை தீவு நாடுகளுக்கு இந்திய பிராந்திய கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பன்னாட்டு கடத்தல் கும்பலில் இந்த இருவரும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி சான்றுகளின் கீழ் சென்னையில் வசித்து வந்த எம்.எம்.எம் நவாஸ் மற்றும் முகமது அஃப்னாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக என்.சி.பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 26, 2020 அன்று, என்.சி.பி., இந்திய கடலோர காவல்படையுடன் சேர்ந்து, இலங்கை மீன்பிடி படகு ஷெனயா துவாவை இந்திய பிராந்திய கடலில் தடுத்து வைத்திருந்தது. இந்த படகில் 95.875 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 18.325 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள்இருந்ததாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர்.
“பல நாடுகளுக்கு கடத்தப்படுவதால் கைப்பற்றப்பட்ட சரக்குகளின் மொத்த மதிப்பு மாறுபடலாம். இந்தியாவில் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ 100 கோடி வரை இருக்கலாம் ”என்று சென்னை மண்டல பிரிவின் என்சிபியின் மண்டல இயக்குனர் புருனோ கூறினார்.
போதைப்பொருட்களுடன், குழுவினரிடமிருந்து ஐந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் மேகசின்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீன்பிடி படகில் இருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குழுவினரின் தகவல்களின் அடிப்படையில், சென்னையில் ரகசியமாக தங்கி வாழ்ந்து வந்த நவாஸ் மற்றும் அஃப்னாஸ் ஆகியோரை என்சிபி அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். அங்கு அவர்கள், வேலை தேடும் நபர்கள் போல் காட்டிக்கொண்டு வாடகை குடியிருப்பில் வசித்து வந்தனர் என என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர், பன்னாட்டு ஹெராயின் சிண்டிகேட்டில் இருவருமே முக்கிய சதிகாரர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானிய மற்றும் ஈரானிய கப்பல்களில் இருந்து போதைப்பொருட்களை வழங்குவதை அவர்கள் கட்டுப்படுத்தினர்.
இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க ஆரம்பித்ததை அடுத்து, அவர்கள் இருவரும் இலங்கையை விட்டு வெளியேறினர். நவாஸுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் உள்ளது என்றும் நம்பப்படுகிறது என்று என்.சி.பியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் கடத்தல் குறித்து பேசிய என்.சி.பி மூத்த அதிகாரி ஒருவர், “உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்திப் பகுதியான ஆப்கானிஸ்தானின் எல்லைகளை உள்ளடக்கிய மரண முக்கோணம் எனும் கோல்டன் கிரசண்டிலிருந்து இந்த போதைப்பொருட்கள் பதப்படுத்தப்பட்டு ஈரான் மற்றும் பாகிஸ்தானியர்கள் மூலம் கடத்தப்படுகின்றன.
பொருட்கள் பொதுவாக ஈரான் மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து மீன்பிடி படகுகளில் ஏற்றப்படுகின்றன. மேலும் கடலுக்கு நடுவே கடலுக்குச் செல்லும்போது, இலங்கை மற்றும் மாலத்தீவிலிருக்கும் மீன்பிடி படகுகளுக்கு மாற்றப்பட்டு, இந்தியாவின் பிராந்திய நீரில் அவை கொண்டு செல்லபப்டுகிறது.” எனத் தெரிவித்தார்.
என்.சி.பி. உருவாக்கிய உளவுத்துறை சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் வெளிநாட்டுப் கும்பல்களின் ஒரு பெரிய வலையமைப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தவும் இதே வழக்கம் பின்பற்றப்பட்டதாகவும், ஆனால் இது தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
0
0