தமிழகம் முழுவது ஒரே மாதிரியான தளர்வுகள் அமல் : 50% பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்கியது!!

5 July 2021, 8:11 am
Bus Starts- Updatenews360
Quick Share

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக அதிகரித்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பாதிப்பின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் 3 வகையாக பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், 7-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, கூடுதல் தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி, 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இ பாஸ், இ பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்களுக்கு அனுமதி இல்லை.

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பஸ் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்பன போன்ற பல்வேறு கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Views: - 98

0

0