கோவையில் தடுப்பூசி பற்றாக்குறை : ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!!!

22 July 2021, 6:33 pm
Vaccine Prob -Updatenews360
Quick Share

கோவை : காரமடையில் தடுப்பூசி பற்றாக்குறையால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் காரமடை வட்டாரத்தில் உள்ள இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி, ஆதிமாதையனூர், கல்லாறு அரசுப்பள்ளிகளில் தலா 250 டோஸ்கள் கோவிஷீல்டு, மேட்டுப்பாளையம் நகர்நல மையத்திற்கு 500 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.

இதனையடுத்து காரமடை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு தடுப்பூசி மருந்துகளை ஒதுக்காத காரணத்தால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சுமூகமானதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து காரமடையை சேர்ந்த புஷ்பா கூறுகையில், பழைய படி முதல் நாளே தடுப்பூசி குறித்து அறிவிக்க வேண்டும் எனவும், இதனால் தினக்கூலிக்கு செல்லும் மக்கள் தங்களது கூலியை விட்டு தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.

மேலும்,காரமடையில் கடந்த பல நாட்களாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஒரு டோஸ் போட்டு விட்டு மற்றுமொரு டோஸ் போட்டுக்கொள்வதற்காக தங்களது வேலையை விட்டுவிட்டு காத்திருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி குறித்து முதல் நாளே அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 90

0

0