மனதை மாற்றிய ஒரே ஒரு குறும்படம்…. இனி அச்சிடப்பட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி விற்கக்கூடாது : ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2022, 4:16 pm
Vada In Pinrt Paper - Updatenews360
Quick Share

தூத்துக்குடி மாவட்டத்தில் தேநீர் கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி வழங்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வைத்து வழங்குவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வடைக் கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் பஜ்ஜி, போண்டா . முட்டைகோஸ், பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர பொருட்கள் பொதுமக்களுக்கு அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பர் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும், தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளது.

இதனால் வணிகர்களின் இம்மாதிரியான பாதுகாப்பற்ற வணிகப் பழக்கவழக்கங்கள் பொதுமக்களின் பொது சுகாதார நலன் பாதிக்கப்படும். அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உண்ணும் பொதுமக்களுக்கு அப்பேப்பரின் அச்சு மையில் உள்ள காரீயத்தினால், வயிற்றுப்புண் ஏற்பட்டு பின்னாளில் அது கேன்சராக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஆகவே, தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி போன்ற இதர பொருட்கள் அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது, வணிகர்களுக்கெதிராக வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க இருப்பதாக கூறிய அவர், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் வணிக நிறுவனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்களின் பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கையும், வணிகர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

அதனடிப்படையில், அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பர் மற்றும் காகிதங்களில் உணவைப் பரிமாறுவதாலும், பார்சல் கட்டுவதாலும் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து , அருந்ததி அரசு என்பவர் இயக்கியுள்ள ” கரூப்பு மை ” என்ற விழிப்புணர்வு குறும்படத்தை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.

மேலும், வாழை இலை, பனை இலை, மூலம் மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் உள்ள இயற்கை முறையிலான பேப்பர் பிளேட்டுகளில் உண்ண வேண்டும். மக்களிடம் உள்ளாட்சி பிரதிநிதி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

பின்னர் பாலிதீன் பேப்பர் தடை செய்த பின்பும், இன்றும் பொது வெளியில் விற்பனை செய்து வருகின்றனர் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு’ பாலிதீன் பேப்பர் வெளியில் பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலிதீன் பேப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்து சட்ட படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர் இது குறித்து பொது மக்கள் புகார் அளிக்க 8680800900 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என கூறினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலவலர் மாரியப்பன், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் அக்குறும்படத்தில் பணியாற்றியவர்கள் உடனிருந்தனர்.

Views: - 1374

0

0