பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

20 July 2021, 10:31 pm
Quick Share

ஈரோடு: அரச்சலூர் கிராமத்தில் பட்டா மாறுதலுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற விஏஓயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா அஞ்சூர் அடுத்த குழந்தைபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் . இவர் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் விஏஓ.,வாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அரச்சலூர் அடுத்த வடுகப்பட்டி, வடக்கு வீதியை சேர்ந்த புவனேஸ்வரி இவரது கணவர் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து வடுகபட்டியில் உள்ள வீட்டை பட்டா மாறுதல் செய்வதற்காக புவனேஷ்வரி விஏஓ., வெற்றிவேலை அணுகியுள்ளார் அவரிடம் பட்டா மாறுதல் செய்து தருவதற்கு 40 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதில் பேரம் பேசி இறுதியாக 30 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளதாக தெரிகிறது.இதனையடுத்து ஏற்கனவே 19 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

மீதித் தொகையை கேட்டு அடிக்கடி புவனேஷ்வரியை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புவனேஸ்வரி புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் புவனேஸ்வரி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விஏஒ., வெற்றிவேலிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ., வெற்றிவேலை கையும் களவுமாக பிடித்தனர்.இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மதியம் முதல் இரவு வரை தீவிர விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதுக்காக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Views: - 108

0

0