காலையில் காய்கறி வியாபாரி.. மாலையில் கஞ்சா வியாபாரி : கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா சாக்லெட் விற்பனை..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 9:54 am
Cannabis Chocolate - Updatenews360
Quick Share

கோவை மாவட்டத்தில் அண்மை காலங்களாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநகர கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ரத்னபுரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் ரத்னபுரி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சங்கனூர் ரோடு கண்ணப்ப நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு முதியவர் ஒருவர் மொபட்டை நிறுத்தி விட்டு அதன் அருகே நின்றிருந்தார். மேலும் அந்த மொபட்டில் ஒரு சாக்குமூட்டையும் இருந்தது.

இதனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அருகே சென்று விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் வலுக்கவே போலீசார் அவரது மொபட் மற்றும் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனர்.

அப்போது அதில் 20.5 கிலோ சாக்லெட்டுகள் இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அது கஞ்சா சாக்லெட் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது எந்த பதிலும் கூறவில்லை.

இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கோவை அறிவொளி நகரை சேர்ந்த பாலாஜி (வயது 56) என்பது தெரியவந்தது. இவர் கோவை அண்ணா மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவர் மார்க்கெட்டில் வேலை பார்த்து கொண்டே கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

பாலாஜிக்கு கஞ்சாவை விற்பனை செய்ய கொடுத்தது ஸ்டைல் சுரேஷ் என்பவர். இவர் கஞ்சா கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். இவரை தலைவனாக கொண்டு 15 பேர் கும்பல் செயல்பட்டு வருகிறது. ஸ்டைல் சுரேஷ் கொடுக்கும் கஞ்சாவை விற்று கொடுப்பதே இவர்களது வேலை. இவர்கள் கோவை மாநகரில் பல இடங்களில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சாவை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் பாலாஜியை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் மற்றும் 20.5 கிலோ கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்தனர். மேலும் பாலாஜி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அவருடன் தொடர்புடைய கஞ்சா கும்பல் தலைவன் ஸ்டைல் சுரேஷ், கவுதம், நந்தா, மோசஸ், கருப்பு கவுதம், விக்கி வேதா, சந்தோஷ், தீபக் சமிலா, சிக்கோல் சந்தோஷ், கவாஸ்கான் உள்பட 15 பேரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கிடையே பாலாஜி கைது செய்யப்பட்டதாலும், போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் ஸ்டைல் சுரேஷ் உள்பட 15 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Views: - 524

0

0