இந்து மதத்தை தாக்கும் அமைப்புகளுக்கு முடிவு கட்ட தான் வேல் யாத்திரை : கோவையில் வானதி சீனிவாசன் கருத்து!!

12 November 2020, 1:37 pm
Vanathi Seenivasan - Updatenews360
Quick Share

கோவை : தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ‘மோடியின் மகள்’ திட்டத்தை பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று துவக்கி வைத்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தந்தையை இழந்து வாழும் பெண்குழந்தைகளுக்கு வானதி சீனிவாசன் நலத்திட்ட உதவிகள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுக்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “பெண் குழந்தைகள் கல்விக்கு உதவ இந்த திட்டத்தை ஆரம்பித்தோம். பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்களை சென்றடைந்ததா? என்று ஒரு சர்வே எடுத்தோம்.

இந்த ஆய்வில் படித்த இளைஞருக்கு வேலைவாய்ப்பு உள்ளதா? கணவனை இழந்த பெண்களுக்கு உதவி தேவையா? என்பதையும் ஆராய்ந்து பார்த்தோம். அதன்படி, தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவையை தொடர்ந்து 5 வருடங்கள் செய்ய தயாராகி உள்ளோம்.

எந்த சூழலிலும் படிப்பை நிறுத்த வேண்டாம். பெண்கள் கல்வி கற்பதே அவர்களை மேம்படுத்தும்.” என்றார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிரதமர் மோடி எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும் பெண்கள் முன்னேற்றத்திற்கு எவ்வாறு உதவும் என்பதையும் கவனித்து திட்டத்தை நிறைவேற்றி வருகிறார்.

செல்வமகள் திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. நகர்ப்புற பெண்களுக்கு வங்கிகள் மூலமாக திட்டங்கள் என பல திட்டங்கள் பெண்களை மையப்படுத்தி உள்ளது.

100 பெண்குழந்தைகளுக்கு 5 வருடம் கல்வி உதவி செய்ய உள்ளோம். அந்த குழந்தைகள் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு உதவி செய்யப்படுகிறது.

வேல் யாத்திரைக்கு முறைப்படி அனுமதி கேட்டோம். என்ன கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதை ஏற்று நடத்துகிறோம். இந்து மதத்தை தாக்கும் அமைப்புகளுக்கு முடிவு கட்ட தான் வேல் யாத்திரை நடத்துகிறோம். பா.ஜ.க சட்டத்தை மதிக்கும் கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 19

0

0