கள்ளக்காதலுக்காக காதல் மனைவியை அடித்துக் கொன்று புதைத்த கணவன்… அம்பலமான அதிர்ச்சி நாடகம்.. சிக்கிய சகோதாரர்கள்…!!

Author: Babu Lakshmanan
30 March 2022, 12:25 pm
Quick Share

வேலூர் : கள்ளக்காதலால் காதல் மனைவியை அடித்து கொன்று புதைத்த கணவன் கொலை செய்து புதைத்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகிய நிலையில், கணவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுங்கன்தாங்கள் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விநாயகம் (24). இவரும் குடியாத்தம் அடுத்த தர்ணம்பேட்டை பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த சுப்ரஜாவும் (24) காதலித்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தற்போது ஒன்னறை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சுப்ரஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை காணவில்லை என்றும், இது குறித்து கணவர் விநாயகத்திடம் கேட்டால் உரிய பதில் அளிக்காமல் விரட்டியதால்,சந்தேகம் அடைந்த சுப்ரஜாவின் அத்தை தனலட்சுமி, சுப்ரஜாவை கண்டுபிடித்து தருமாறு கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் விநாயகத்தை காவல் துறையினர் அழைத்து விசாரித்த போது, அவர் கூறிய தகவலை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்.

இது தொடர்பான காவல் துறையினரின் விசாரணையில், விநாயகமும்- சுப்ரஜாவும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும், விநாயகத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இது மனைவி சுப்ரஜாவுக்கு தெரியவரவே இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் எற்பட்ட தகராறில் விநாயகம் சுப்ரஜாவை தாக்கியுள்ளார். இதில் சுப்ரஜா மயக்கமடையவே அவரை சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று வடுங்கன்தாங்கள் டூ முடினாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள சர்கார் தோப்பு என்ற வனப்பகுதியில் காதல் கணவர் விநாயகம், விநாயகத்தின் சகோதரன் விஜய், 17 வயது சகோதரன் என 3 பேரும் சுப்ரஜாவை அடித்து கொலை செய்துவிட்டு அங்கேயே புதைத்துள்ளனர்.

இதனையடுத்து விநாயகம், விஜய், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த காவல் துறையினர், இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும், புதைத்த இடத்தை நேரில் காட்ட சொல்லி அழைத்து சென்று கே.வி.குப்பம் வட்டாட்சியர் சரண்யா, குடியாத்தம் DSP ராமமூர்த்தி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழு மற்றும் வனத்துறையினர் முன்னிலையில் சுப்ரஜாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அவற்றில் சில பாகங்களை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கைதான கணவன் விநாயகம், விஜய் உள்ளிட்ட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 1263

0

0