மூன்றே மாதத்தில் முடிந்த காதல் திருமண வாழ்க்கை… பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகார் ; கணவன் வீட்டார் மீது எழுந்த சந்தேகம்!!

Author: Babu Lakshmanan
6 December 2022, 8:10 pm
Quick Share

வேலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 3 மாதங்களே ஆன பெண் ஒருவர் விவசாய கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திருவிக நகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா என்பவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 19). பேரணாம்பட்டு அடுத்த ரங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மோகன் என்பவருடைய மகன் ஸ்ரீதர் (20). ராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீதர் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன் பெற்றோர்கள் எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ராஜேஸ்வரி மற்றும் ஸ்ரீதர் இருவரும் ஸ்ரீதரன் வீட்டார் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் அவ்வப்போது குடும்ப சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய முன் தினம் இரவு மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டு, இதில் ஸ்ரீதர் ராஜேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த ராஜேஸ்வரி ஸ்ரீதரின் தாயாரிடம் சென்று கூறி அவர்களின் வீட்டிலே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

காலையில் எழுந்து பார்த்த போது ராஜேஸ்வரி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் தேடி, பின்னர் ராஜேஸ்வரியின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். ராஜேஸ்வரியின் பெற்றோர்கள் எங்களுடைய மகள் இங்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதரின் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடும்போது, ரங்கம்பேட்டை அடுத்த போக்கலூர் பகுதியில் கணபதி என்பவருடைய விவசாய நிலத்தில் பிணமாக இருப்பது தெரியவந்தது.
தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பேரணாம்பட்டு காவல் துறையினர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் இருந்து ராஜேஸ்வரி உடலை மீட்கும் போது ராஜேஸ்வரி கை, அவர் அணிந்திருந்த துப்பட்டாவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜேஸ்வரியின் தந்தை ராஜா மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீதரின் குடும்பத்தாரிடம் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் குடியாத்தம் ஆர்டிஓ வெங்கட்ராமன் இருவரின் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட மூன்றே மாதத்தில் பெண் விவசாய கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் பெண்ணின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 733

0

0