கிசான் முறைகேடு : 7 பேரை கைது செய்து சிபிசிஐடி அதிரடி!!

19 September 2020, 10:21 am
Villupuram 7 Arrest - updatenews360
Quick Share

விழுப்புரம் : விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 7 பேரை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கென மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் 1.4.2020 தொடங்கி இத்திட்டத்தில் எவ்வளவு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், அதில் எத்தனை பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் முறைகேடாக சேர்ந்துள்ளனர் என்று ஆய்வு செய்தனர்.

இதில் விவசாயிகள் அல்லாதவர்கள் 2 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் உதவி இயக்குனர்கள் 2 பேர் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்கள் 18 பேர் ஆக மொத்தம் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் போலி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை வங்கிகள் மூலம் திரும்ப பெறும் நடவடிக்கையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இதுவரை 60 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.17 கோடி வரை திரும்ப பெறப்பட்டு அந்த தொகை அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மீதமுள்ள போலி விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்தும் பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் யார், யார்? என கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த முறைகேட்டில் அட்மா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்களான உளுந்தூர்பேட்டை தாலுகா நத்தாமூரை சேர்ந்த முருகன் (வயது 26), கார்த்திக்கேயன் (வயது 28), வாணியங்குப்பத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது 26), எறையூர் பாளையத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 27), வடமாம்பாக்கம் சுரேஷ் (வயது 26), விருத்தாசலம் தாலுகா சின்னபண்டாரங்குப்பத்தை சேர்ந்த அன்பரசன் (வயது 31) மற்றும் உளுந்தூர்பேட்டை தாலுகா களமருதூரில் கணினி மையம் நடத்தி வரும் உளுந்தூர்பேட்டை ஆத்தூரை சேர்ந்த சக்திவேல் (வயது 31) ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

அவர்கள் 7 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகன் உள்ளிட்ட 7 பேரும் சேர்ந்து உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் 4 ஆயிரம் பேரை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்த்து பணம் பெற்றிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து முருகன் உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இரவு அவர்களை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 10

0

0