மீன் கடையை எட்டி உதைத்து அகற்றிய பேரூராட்சி ஊழியர்கள்.! கெஞ்சும் பெண்ணின் வீடியோ.!!
5 August 2020, 10:12 amவிழுப்புரம் : மீன் கடையை காலால் உதைத்த பேரூராட்சி ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விழுப்புரம் அருகே வளவனூர் பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்கள் சிலர், பொதுமக்கள் முறையாக ஊரடங்கு விதிகளை கடைபிடிக்கிறார்களா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விழுப்புரம் சிறுவந்தாடு சாலையில் ஒரு பெண், சாலையோரமாக மீன் கடை போட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த பேரூராட்சி ஊழியர்கள், இங்கு மீன் கடை வைக்கக்கூடாது, உடனே கடையை காலி செய்யும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர் நீண்ட நாட்களாக இந்த இடத்தில் மீன் வியாபாரம் செய்து வருவதாகவும் தன்னை அனுமதிக்கும்படி அந்த பெண் கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்க மறுத்த பேரூராட்சி ஊழியர்கள், அந்த மீன் கடையை காலால் எட்டி உதைத்தனர். இதில் மீன்கள் அனைத்தும் ரோட்டில் சிதறின. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், பேரூராட்சி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
வளவனூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ள நிலையில் அதனையெல்லாம் அகற்றாமல் சாலையோரம் வயிற்றுப்பிழைப்புக்காக மீன் வியாபாரம் செய்து வந்த பெண்ணை மிரட்டி அவரது கடையை காலால் எட்டி உதைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று வளவனூர் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டினர். இந்த சம்பவ விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
0
0