ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் இல்லாததால் மாணவி தற்கொலை…! ஒரு தலை காதலால் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்ட வாலிபர்..?

3 September 2020, 1:57 pm
couple death- - updatenews360
Quick Share

விழுப்புரம் : தற்கொலை செய்து கொண்ட காதலியின் உடலை எரியூட்டப்பட்ட நெருப்பில் வாலிபர் ஒருவர் தனது ஒரு தலை காதலுக்காக உடன்கட்டை ஏறியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ. இவர், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு நர்சிங் படித்து வந்தார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடி உள்ளதால், தற்போது ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவரது தந்தை ஆறுமுகம் மூன்று மகள்களுக்கும் ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார். அதே செல்போனில் நித்யஸ்ரீ மற்றும் அவரது இரு சகோதரர்களும் சேர்ந்து மூன்று பேரும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு, கல்வி பயில வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

ஆனால் மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதால், மூன்று பேரும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டு படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நித்யஸ்ரீ தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே, நித்யஸ்ரீயை அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நித்யஸ்ரீ உயிரிழந்த நிலையில் அவரது உடல் அங்கு உள்ள மயான கொட்டகையில் எரிக்கப்பட்டது. இதை அறிந்த ராமு மயான கொட்டகை அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நித்யஸ்ரீயின் உடல் எரிந்து கொண்டிருந்த நிலையில், ராமு அதே தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

ராமு வீட்டிற்கு வராத நிலையில் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரை காணவில்லை என திருநாவலூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை முருகன் புகார் அளித்துள்ளார். நித்தியஸ்ரீயின் உடலுடன் மேலும் ஒரு சடலம் எரிந்திருப்பதனால், ஒரு தலையாக காதலித்தாலும், காதலி தானே என்ற அன்பினால் ராமுவும் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்காக, விழுப்புரம் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மயான கொட்டகையில் கிடந்த எலும்புகளைக் கொண்டு எரிந்தது ராமு தானா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலிப்பதாகக் கூறி, இறுதியில் கைக் குலுக்கி விட்டு பிரிந்து செல்லும் இந்த கால கட்டத்தில், தான் ஒரு தலையாக காதலித்த காதலிக்காக வாலிபர் உடன்கட்டை ஏறி உயிரை விட்டிருப்பதாகக் கூறப்படுவது உண்மையான காதல் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக உள்ளது.

Views: - 0

0

0