சாலையை திடீரென கடந்த பாம்பு… அதிர்ச்சியில் பேருந்து மீது மோதிய ஆட்டோ.. ஓட்டுநர் உயிரிழப்பு… விழுப்புரம் அருகே சோகம்..!!

Author: Babu Lakshmanan
4 January 2022, 4:28 pm
Quick Share

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பாம்பு ஒன்று சாலையை கடந்த போது, பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை என்பதால், இருபுறமும் காடுகளும், விவசாய நிலங்களும் அதிகம் உள்ளன. இந்த சாலைகள் எப்போதும் கூட்டமின்றி இருப்பதால், வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால், சாலையின் குறுக்கே நாய், பாம்பு என எதுவந்தாலும், வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பது சகஜமான ஒன்றாக மாறி விட்டது.

அந்த வகையில், இன்று காலையில் வாகனங்கள் இருபக்கமும் சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு ஓரத்தில் இருந்த பாம்பு ஒன்று சாலையைக் கடந்தது. அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பாம்பு செல்வதைக் கண்டு அதிர்ந்து போனார். இதனால், என்ன செய்வது என்பதை யோசிப்பதற்குள், பேருந்தின் மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ சுக்குநூறாகிப் போனது. ஆட்டோவை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்தனர். பாம்பு சாலையில் சென்றதால் கவனம் சிதறிய ஆட்டோ ஓட்டுநர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 437

0

0