பேருந்து நிலையத்தில் சிறுமிகளிடம் அத்துமீறல்.. இளைஞருக்கு சரமாரி அடி.. தலைதெறிக்க ஓட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2021, 7:35 pm
திண்டுக்கல் : பேருந்து நிலையத்தில் சிறுமிகளிடம் பாலியல் ரீதியில் அத்துமீறிய போதை வாலிபரை பொதுமக்கள் தாக்கிய போது தனக்குத் தானே தலையில் அடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு சில போதை ஆசாமிகள் சில்மிஷ வேலைகளில் ஈடுபடுவது அவ்வப்போது நடந்து வருகிறது. உச்சகட்ட போதையில் பேருந்துகளை வழிமறித்து தகராறு செய்வது, அளவுக்கு மிஞ்சிய போதையில் பேருந்து நிலையத்தில் உடைகள் கலைந்து நிலையில் உறங்குவது என்பது போன்ற பல்வேறு முகம் சுளிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் இன்று பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பொதுமக்கள் அதிகளவு காத்திருந்தனர். இதை பயன்படுத்திக் கொண்ட ஒரு போதை இளைஞர் பெற்றோர்களை விட்டு தனியாக தள்ளி நின்ற சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அந்தச் சிறுமிகள் பெற்றோர்களிடம் தெரிவிக்க பேருந்து நிலையத்தில் அந்த போதை ஆசாமியை சிறுமிகளுடன் வந்த பெற்றோர்களும் உறவினர்களும் தேடி பிடித்தனர். சிறுமி அடையாளம் காட்ட அந்த வாலிபர் போதையில் வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறியுள்ளார் .
இதை அடுத்து ஆத்திரம் அடைந்த பெற்றோர் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். அடியை வாங்கி கொண்ட இளைஞர், ஒரு கட்டத்தில் தனக்குத் தானே கைகளால் தனது தலையில் அடித்துக் கொண்டு ஏதேதோ பேசியபடி ஓட்டம் பிடித்தார் .
இது போன்ற போதை நபர்களால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க தொடர் தீவிர கண்காணிப்பை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல பொது இடங்களுக்கு வரும் பெற்றோர்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தங்களது பெண் குழந்தைகளை அருகாமையில் வைத்து கண்காணிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது.
0
0