இன்னும் நிறைய செஸ் போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் : விஸ்வநாதன் ஆனந்த் விருப்பம்..!!

Author: Babu Lakshmanan
10 August 2022, 5:34 pm
Quick Share

சென்னை : சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக இருந்தாலும் இன்னும் நிறைய செஸ் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

டாட்டா ஸ்டீல்ஸ் நடத்தும் 4வது மகளிர் செஸ் இந்தியா தொடர் இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் துவங்கி டிசம்பர் 4 வரை கோல்கட்டாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொள்ளும் செய்தியாளர் சந்திப்பு சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சி மேடையில் டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் தூதர் விஸ்வநாதன் ஆனந்த் பேசியதாவது ;- மிகவும் பெருமையாக இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடந்து முடிந்தது. இது எனக்கு மிகவும் பிடித்த டோர்னமென்ட். இன்று செஸ் ஒரு முக்கிய விளையாட்டாக கருதப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டாடா ஸ்டீல் செஸ் இந்தியா போன்ற போட்டிகள், நமது இளம் வீரர்கள் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்களுடன் போராடுவது உண்மையில் புதிய சாம்பியன்களை உருவாக்குவதற்கு உதவுகிறது.

இன்று விளையாட்டில் சிறந்து விளங்கும் ஆண்களும், பெண்களும் கொண்ட செஸ் பவர் ஹவுஸாக இந்தியா கருதப்படுகிறது. ஆண்கள் பிரிவிற்கு சமமான பரிசுத் தொகையுடன் பெண்கள் போட்டியை அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்க சிறந்த முன்முயற்சி. சதுரங்கம் சமமான விளையாட்டாக இருக்க வேண்டும், எனவும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஸ்வநாதன் ஆனந்த், கொல்கத்தாவில் நவம்பர் 29 முதல் 4வது மகளிர் செஸ் இந்தியா போட்டி துவங்குகிறது என்றும், இந்த போட்டிக்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் என்றும், சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்தும் , பெண்கள் போட்டியில் உக்ரைன், ஜார்ஜியா மற்றும் இந்தியா அணிகள் பதக்கங்களை வென்றுள்ளனர். இது மிகவும் அற்புதமான போட்டி எனவும் தெரிவித்தார்.

குழந்தைகளிடம் செஸ் போட்டியை பிரபலப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழக அரசும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

தன்னுடைய அடுத்த போட்டிகள் குறித்து பேசியவர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக இருந்தாலும் நிறைய செஸ் போட்டியில் இன்னும் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், கிராமப் புறங்களில் மாணவர்களிடம் செஸ் குறித்து கொண்டு சேர்ப்பதற்கு, தமிழக அரசும் வழிகாட்டியாக இணைந்து செய்வதாகவும், கிராமப் புறங்களில் இன்னும் இதை மேம்படுத்தவும், பள்ளிகள் மூலம் மேம்படுத்தலாம், என்று கூறினார்.

Views: - 1133

0

0