சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத்தின் ‘அந்த’ செயல்தான் காரணம் : போலீசார் அறிக்கையில் அதிர்ச்சி..!!

20 January 2021, 6:15 pm
Quick Share

சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சென்னை நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 9ம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் குறித்து நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத், கடந்த மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சித்ராவின் மர்ம மரணம் தொடர்பாக ஆர்டிஓ திவ்யஸ்ரீ, சித்ராவின் குடும்பத்தார், அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள், சித்ரா தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் பணியாளர்கள், மேலாளர் என பலரிடமும் 5 கட்டங்களாக விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார். இதனிடையே, சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி மாற்றக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவில் அவரது தாயார் விஜயா மனு அளித்துள்ளார். அதில், இதுவரை முறையான விசாரணை நடக்கவில்லை என்றும், எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்படப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி ஹேம்நாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சித்ரா தனது குடும்பத்திடம் அன்பு காட்டுவது அவரது தாயாருக்கு பிடிக்கவில்லை என்றும், அவரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி, இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி முறையிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத்திற்கு எழுந்த சந்தேகம்தான், அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்தது என்று சென்னை நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 2-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.