சோதனை மேல் சோதனை.. வெளியேறிய ஓபிஎஸ் மீது பாட்டிலை வீசிய தொண்டர்கள் : சலசலப்பில் முடிந்த பொதுக்குழு கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 1:10 pm
OPS - Updatenews360
Quick Share

அதிமுகவின் அடுத்த பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி கூடும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். பொதுக்குழு கூட்டம் தொடங்கியவுடன், ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் குறுக்கிட்டு தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய கே.பி.முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர். அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான்.

அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தெரிவித்தது, ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. கூட்டத்தில் இபிஎஸ்-கே அதிக ஆதரவு இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்காலிக அவைத்தவைராக உள்ள தமிழ்மகன் உசேனை கட்சியின் அவைத்தலைவராக தேர்வு செய்தது பொதுக்குழு.

எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். ஒற்றை தலைமை நாயகன் என பழனிசாமியை குறிப்பிட்டு ஜெயக்குமார் மேடையில் பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரட்டை தலைமையால் சரியான எதிர்க்கட்சியாக அதிமுகவால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை என்றும் சிவி சண்முகம் தெரிவித்தார்.

பொதுக்குழுவில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஜூலை 11ம் தேதி காலை 9.15 மணிக்கு அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். சிவி சண்முகம் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, பொதுக்குழு கூட்டம் தேதியை அறிவித்தார் அதிமுக அவைத்தலைவர்.

அதிமுக அவைத்தலைவராக் தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் உரையாற்றும்போது ஓ.பி.எஸ் பெயரை குறிப்பிடவில்லை. இதனிடையே, சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வெளியேற, அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தெரிவித்து பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறிய வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழுவில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாகவும், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதாலும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து, வெள்ளி செங்கோல் பரிசளித்தனர்.

Views: - 456

0

0