இது என்ன புதுசா இருக்கு…பெரிய குடம் ரூ.13, சிறிய குடம் ரூ.8: திடீர் போஸ்டரால் அதிர்ச்சியில் மதுரை மக்கள்..!!

5 March 2021, 2:16 pm
madurai poster - updatenews360
Quick Share

மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக குடிதண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திருப்பரங்குன்றத்தில் குடிநீர் வாகன உரிமையாளர்கள் ஒட்டிய போஸ்டரால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக குடிதண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குடிநீர் வாகன உரிமையாளர்கள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான தண்ணீர் விலை உயர்வு தொடர்பான இந்த போஸ்டர் திருப்பரங்குன்றம் மக்களை கலங்கடித்துள்ளது.

மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த குடிநீர் தேவை வைகை அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களை நம்பியிருக்கிறது. இந்தத் திட்டங்கள் மூலம் முழுமையாக மதுரை மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. தற்போது முல்லைபெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் எப்போது முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என்பது தெரியவில்லை.

தற்போது கோடை வெயில் மதுரையில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. வீடுகளில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குடிநீர் திட்டங்களில் போதுமான குடிநீர் கிடைக்காததால் மாநகராட்சி, மற்ற உள்ளாட்சி அமைப்புகளால் மதுரை மக்களுக்கு போதுமான தண்ணீரை வழங்க முடியவில்லை. அதனால், திரும்பிய பக்கமெல்லாம் குடியிருப்புப் பகுதிகளில் தனியார் குடிநீர் லாரிகள், டிராக்டர்கள், குட்டியானை வண்டிகள் தண்ணீரை விற்று வருகின்றன.

இந்நிலையில் மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் ஒட்டப்பட்டுள்ள விநோத போஸ்டர் மக்களை கலங்கச் செய்துள்ளது. அதில், டீசல் விலை உயர்வின் காரணமாக தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதில், தண்ணீரின் விலை பெரிய குடம் ரூ.13, சிறிய குடம் ரூ.8, கைக்குடம் ரூ.4 என்று விற்கப்படும் என்றும் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பு தரும்படியும் வேண்டுகோள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மதுரை மக்கள், குடிநீர் தேவைக்குப் போக மற்ற வீட்டு உபயோகத்திற்கு லாரி தண்ணீரைதான் பெருமளவு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆழ்துளை கிணறு உள்ளவர்கள் அதிலிருந்து தண்ணீர் எடுத்து சமாளிக்கின்றனர். தற்போது அவர்கள் ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டதால் மக்கள், அனைத்து தேவைகளுக்கும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்களையே நம்பியிருக்க வேண்டி உள்ளது.

நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்வதே தவறு, அதை விலை உயர்ந்துவிட்டதாக போஸ்டரும் ஓட்டி மக்களை அதிரச்சியடைய வைத்துள்ளனர் தனியார் லாரி உரிமையாளர்கள்.

Views: - 2

0

2