தேநீருக்கு இரட்டை குவளை வேண்டாம்.. அதே போலத்தான் குடிநீருக்கு இரட்டைத் தொட்டியும்.. : திருமாவளவன் வைத்த கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 8:04 pm
Thiruma - Updatenews360
Quick Share

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பொங்கல் வைத்துச் சிறப்பாகக் கொண்டாடினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தை திருநாள் தான் தமிழர்களின் புத்தாண்டு. கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் தை திருநாளைப் புத்தாண்டாகக் கொண்டாடச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
இருப்பினும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அதை ரத்து செய்து சித்திரையைப் புத்தாண்டாக அறிவித்தார். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும்.

அம்மா என்று சொன்னாலும் தாய் என்று சொன்னாலும் ஒன்று தான்… அம்மா என்பதை அதிகாரப்பூர்வமாகச் சொல்கிறோம். அதுபோல தான் தமிழ்நாடு என்றாலும் தமிழகம் என்றாலும் ஒன்று தான்.. இதில் வேறுபாட்டைக் கொண்டு வர முயல்வது குதற்கவாதம்.

இந்த இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளதாக ஆளுநர் இப்போது தொடங்கியுள்ளது சொல் விளையாட்டு இல்லை. அது ஒரு கருத்தியல் முரண். ஆளுநர் நடந்து கொள்வது தமிழ் இனத்திற்கு விரோதமானது..

மேலும், திராவிட கருத்தியலுக்கும் சமூக நீதி அரசியலுக்கும் எதிரான ஒன்றாகும்.. அவரை ஆளுநராக நியமித்த போதே அவர் அரசியலில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்த முயல்வார் என எச்சரித்தேன். இப்போது அதைத்தான் அவர் செய்து வருகிறார்.

இதுபோன்ற பிற்போக்கு மற்றும் மதவாத சக்திகளிடம் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும். வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்திற்கு மனித உணர்வு உள்ள அனைவருமே வெட்கத்தில் தலை குனிய வேண்டும்.. இது ஒரு வெட்கக் கேடான விஷயம்.. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இன்னும் கூட கைது செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த வழக்கை விசாரிக்க முதலில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இதில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே அச்சுறுத்தியது. அங்குள்ள விசிக நிர்வாகியைக் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்க மிரட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட உடன் இப்போது வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

இந்த கொடூரத்தைச் செய்த நபர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும். தமிழர்களின் அவமான சின்னமான அந்த குடிநீர்த் தொட்டியை உடனடியாக இடிக்க வேண்டும்.

Views: - 326

0

0