ஆட்சி மாற்றம் ஏற்பட கடுமையாக உழைத்தோம், ஆனால் இப்போது அரசு கண்டுகொள்ளவில்லை : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2022, 9:20 am
Jacto Jio - Updatenews360
Quick Share

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அன்பரசன் தலைமையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வம், கடந்த தேர்தலின் போது ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஆனால் தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆட்சி பொறுப்பு ஏற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை. இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகளுக்குரிய கருத்துக்களையும் நிகழ்வுகளையும் நடத்தி வரும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜாக்டோ ஜியோ சார்பில் இந்த மாத இறுதியில் சென்னையில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. அதில் முதலமைச்சர் கலந்து கொள்வதாக ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த மாநாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் வந்தால் அந்த சம்பவம் உண்மையாக இருந்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

Views: - 485

0

0