பட்டு நூல் விலை இரு மடங்கு உயர்வுக்கு எதிர்ப்பு : 10 நாட்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2022, 2:03 pm
Silk Yarn Rate -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தில் பட்டுநூல் விலையை குறைக்கக்கோரி இன்று முதல் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடங்கியது.

ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி பட்டு சேலை, கோரா காட்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்தறி சேலை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கைத்தறி பட்டு சேலை நெசவு செய்வதற்கான முக்கிய மூலப்பொருளான பட்டு நூல் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் பட்டுசேலை தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கைத்தறி பட்டு நூல் சேலை உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பட்டு நூல் ஒரு கிலோ 3,000 முதல் 3,500 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்பொழுது 6,000 முதல் 6,500 வரை விற்பனை ஆவதால் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டு நூல் விலை உயர்வால் பட்டு சேலைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் பட்டு நூல் விலையை குறைக்க மத்திய அரசு மற்றும் ஜவுளித் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெசவாளர்கள் பட்டுநூல் வார்ப்பையும் நெசவு செய்வதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 1129

0

0