நல வாரியங்கள் மூடப்படாது; சிறப்பாக செயல்பட நடவடிக்கை – தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு அமைச்சர் பேச்சு..!

14 July 2021, 8:02 pm
Quick Share

கோவை: தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள், மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், தமிழக தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், தொழிலாளர்களின் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார், தொழிலாளர்களுக்கு தொழில் வரி போடப்படுவதை இரத்து செய்ய வேண்டும், வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ள பகுதியில் குறைந்த ஏடிஎம் எந்திரங்களே உள்ளது. இதனால், தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் ஊதியம் எடுப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும், கொரோனா காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் இன்றி சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

சிறு – குறு தொழிற்துறையினரும் பல்வேறு பிரச்சினைகளை கூறினர். பென்சன் திட்டம் தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.இதைத்தொடர்ந்து, அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில்;- நலத்திட்ட உதவிகள் வழங்க 50 ஆயிரம் பேர்களின் பட்டியல் தயாராகி விட்டது. முதற்கட்டமாக, ஒரே நாளில் உதவித்திட்டங்கள் முதல்வர் கையில் வழங்கப்பட உள்ளது. சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இறப்பு தொகை, திருமணம் மற்றும் கல்வி உதவித்தொகை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே திருமண உதவித்தொகை வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

தினக்கூலி தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளீர்கள், வைப்பு நிதி, வங்கி கணக்குகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். வெளி மாநில தொழிலாளர்களுக்கு அட்டை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். ஒப்பந்த பணியாளர், நிரந்தர பணியாளர், பயிற்சி தொழிலாளர் என்பது கணக்கிடப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை கருணாநிதி கொண்டு வந்தார். நல வாரியங்கள் மூடப்படாது, சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இருக்கும் பகுதியில் ஏடிஎம் எந்திரங்கள் கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, விபத்து மற்றும் இயற்கை மரணங்களான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2,57,000 த்திற்கான காசோலையும், தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டையை வழங்கினார்.

Views: - 88

0

0