டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பில் உண்மை நிலவரம் என்ன…? தமிழக – மத்திய அரசுகளின் மாறுபட்ட விபரங்கள்.!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 7:12 pm
Delta Plus Corona - Updatenews360
Quick Share

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

இரண்டாவது அலை பரவலுக்கு டெல்டா வகை வைரஸ் முக்கிய காரணமாக கருத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை ,வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை பரவியது.

இந்நிலையில்,தற்போது டெல்டா பிளஸ் வகை வைரஸானது தமிழகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பரவி வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும் ‘டெல்டா பிளஸ்’ தொற்று உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

டெல்டா பிளஸ் என்ற பெயரில் உள்ள பிளஸ் அதிக வைரஸைக் குறிக்கவில்லை. மாறாக,பிளஸ் என்பது ஏற்கனவே இருக்கும் மாறுபாட்டின் கூடுதலாகும். இது டெல்டாவை விட வலிமையானது என்று அர்த்தமல்ல. டெல்டாவை விட கூடுதலாக ஒரே ஒரு K417N மட்டுமே வேறுபட்டது. எனினும் கூடுதல் ஆய்வுகள் தேவை என தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் டாக்டர் சுஜீத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்ததாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 160

0

0