ஆபரேஷன் செய்தும் மனைவி மீண்டும் கர்ப்பம் : அதிர்ச்சியில் கணவர்!!

30 December 2020, 2:41 pm
Sathy Issue -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பம்மானதால் நஷ்ட ஈடு வழங்க கோரி கர்ப்பிணி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். பனியன் தொழிலாளியான இவருடைய மனைவி வைஜெயந்தி (வயது 24 ) தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வைஜயந்திக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக வைஜயந்திக்கு வயிற்று வலி ஏற்படவே, மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் இறைச்சி சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த வைஜெயந்தி சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அங்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி அவர் கருவுற்று ஐந்து மாதங்கள் நிறைவடைந்து உள்ளதாகவும் கருவில் உள்ள குழந்தை அசைவுகளுடன் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட வைஜயந்தி அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து வைஜயந்தியின் குடும்பத்தினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு மருத்துவர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர் இடமும் புகார் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒரு பெண்ணுக்கு மீண்டும் கருவுற்றிருப்பது எப்படி என கேள்வி எழுப்பினர். அரசு மருத்துவமனையில் இதுபோன்று கோளாறுகள் எப்படி நடக்கிறது என்றும், ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கூலி வேலைக்கு செல்லும் தங்களால் மூன்றாவது குழந்தையை எப்படி காப்பாற்ற முடியும் என கேள்வி எழுப்பினர். அரசு தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, இது போன்ற தவறுதலாக ஒரு சில நேரங்களில் எதிர்பாராத விதமாக நடப்பதுண்டு. கர்ப்பிணி பெண் அரசுக்கு விண்ணப்பித்தால், அரசின் சார்பில் (30,000) முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக்கூறினர்.

Views: - 4

0

0